சினிமா பட காட்சிகளை மிஞ்சும் சம்பவம்:ஓடும் லாரியில் இருந்து மதுபாட்டில்கள் திருடிய கும்பல்ஆம்னி வேனில் 40 கி.மீட்டர் தூரம் பின்தொடர்ந்து சென்று கைவரிசை காட்டியது அம்பலம்

கள்ளக்குறிச்சியில் சினிமா பட காட்சிகளை மிஞ்சும் விதமாக, ஓடும் லாரியில் இருந்து மதுபாட்டில்களை 4 பேர் கொண்ட கும்பல் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-05-20 18:45 GMT

தியாகதுருகம், 

கேரள மதுபான கழகத்திற்கு புதுச்சேரியில் உள்ள கம்பெனியில் இருந்து தயார் செய்யப்பட்ட மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் மாலை லாரி ஒன்று புறப்பட்டது.

அந்த லாரியை, கோயம்புத்தூர் அருகே சூலூர் செங்கதுறை பகுதியை சேர்ந்த பழனிசாமி (வயது 51) என்பவர் ஓட்டினார். அப்போது, விழுப்புரம் ஆயுதப்படையை சேர்ந்த போலீஸ்காரர் விஜயகுமார் (34) என்பவர் வழி காவல் பணிக்காக லாரியில் சென்றார்.

லாரி, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த மாடூர் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, லாரி மெதுவாக சென்றதை பயன்படுத்தி, 2 பேர் லாரியின் பின்புறத்தில் இருந்து குதித்தனர்.

இதை, அந்த லாரிக்கு பின்னால் வந்த மற்றொரு லாரி டிரைவர் பார்த்தார். உடன் அவர், அந்த லாரியின் டிரைவரிடம், பின்னால் இருந்து 2 பேர் குதித்து செல்கிறார்கள் என்று தெரிவித்தபடி, அந்த லாரி டிரைவரும் சென்றுவிட்டார்.

மதுபாட்டில்கள் திருட்டு

இதனால் சந்தேகம் அடைந்த, பழனிசாமி லாரியை சாலையோரம் நிறுத்தினார். பின்னர் போலீஸ்காரர் விஜயகுமாரும் பின்னால் சென்று பார்த்தார். அப்போது லாரியில் மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டிகள் திறந்து கிடந்ததுடன், அதில் இருந்த மதுபாட்டில்கள் திருடுபோயிருந்ததும் தெரியவந்தது.

மேலும் அந்த 2 நபர்களும் மதுபாட்டில்களை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, போலீஸ்காரர் விஜயகுமார் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி தியாகதுருகம் போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர்.

அதில், அந்தபகுதியில் சந்தேகத்துக்கு இடமாக ஒரு ஆம்னி வேன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதன் பதிவு எண்ணை கைப்பற்றி அதன் மூலம் போலீசார் விசாரணையை முன்னெடுத்தார்கள்.

4 பேரை பிடித்து விசாரணை

அதில், ஆம்னிவேன் மதுரை மாவட்டம் கொசக்காபட்டி பகுதியை சேர்ந்த மாயாண்டி (40) என்பவருக்கு சொந்தமானது என்கிற விவரம் தெரியவந்தது. மேலும், வேனை அவர் ஓட்டி வந்துள்ளார்.

அவருடன் புதுக்கோட்டை அருகே நாகமலை கனகராஜ் (43), தேனி மாவட்டம், சிவலிங்கம் நாயக்கம்பட்டு ரத்தன பாண்டியன் மகன் ஜெகன் குமார் (23), திண்டுக்கல் மாவட்டம் கே.பி.சத்திரம் கொச்சப்பன் மகன் விஜயகுமார் (26) ஆகியோர் வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து, தியாகதுருகம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் சினிமா படகாட்சிகளை மிஞ்சும் விதமாக அவர்கள் திருட்டை நிகழ்த்தி இருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியானது.

இந்த திருட்டு சம்பவம் நடந்த விவரம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திட்டம் போட்டு திருட்டு

கேரள மாநிலத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு மொத்தமாக மதுபானங்கள் எடுத்து செல்வது மாயாண்டிக்கு ஏற்கனவே தெரியவந்துள்ளது. எனவே மாயாண்டி, கனகராஜ், ஜெகன்குமார், விஜயகுமார் ஆகியோர் சேர்ந்து திருட்டை எப்படி கட்சிதமாக செயல்படுத்துவது என்று திட்டம் போட்டுள்ளனர்.

அதில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து வரும் லாரி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிக்கு வரும் போது, மெதுவாக செல்லும். இதை பயன்படுத்தி லாரியில் 2 பேர் ஏறிக்கொள்வது என்று முடிவு செய்துள்ளனர்.

லாரியில் இருந்து கேட்ச் போட்டனர்

அதன்படி, ஜெகன்குமார், விஜயகுமார் ஆகியோர் லாரியின் பின்பகுதியில் ஏறிக்கொண்டனர். அதேபோன்று, ஆம்னி வேனின் மேல்பகுதியில் கனகராஜ் ஏறி அமர்ந்து கொண்டார். மாயாண்டி ஆம்னி வேனை ஓட்டினார்.

இதில், லாரியின் வேகத்துக்கு ஈடாக அதை பின்தொடர்ந்த படி மாயாண்டி ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். லாரியில் ஏறி இருந்த ஜெகன்குமார், விஜயகுமார் அங்கிருந்த மதுபாட்டில்களை ஒவ்வொன்றாக தூக்கி, பின்னால் ஆம்னி வேனின் மேல்பகுதியில் அமர்ந்திருந்த கனகராஜியிடம் வீசி உள்ளனர்.

அவரும், கிரிக்கெட்டில் பந்தை பிடிப்பது போன்று, மதுபாட்டில்களை பிடித்துவந்தார். கிரிக்கெட்டில் கூட வீரர்கள் ஏதாவது ஒரு பந்தை தவற விடுவார்கள். ஆனால், இவர்கள் எதையும் தவறவிடாமல் கேட்ச் பிடித்து திருட்டையும் கன கட்சிதமாக அரங்கேற்றினார்கள்.

இந்த நிலையில் அடுத்ததாக மாடூர் சுங்கச்சாவடி வந்த போது, லாரியில் இருந்த இருவரும் இறங்கி விட்டனர்.

40 கி.மீ. தூரத்தை பயன்படுத்தினர்

அதாவது, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் இருந்து சேலம் ரோடு மாடூர் சுங்கச்சாவடி இடையிலான தூரம் சுமார் 40 கி.மீ. ஆகும். இந்த தூரத்தை பயன்படுத்தி, இவர்கள் லாரியில் இருந்து 216 மது பாட்டில்களை திருடி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, மாயாண்டி, கனகராஜ், ஜெகன்குமார், விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான 194 மது பாட்டில்கள் மற்றும் ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

வேறு சம்பவத்தில் தொடர்பு?

தேசிய நெடுஞ்சாலையில் சரக்குகளை ஏற்றிச்செல்லும் லாரியை குறிவைத்து, இது போன்று கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அதேபோன்ற ஒரு கொள்ளையாக இது இருப்பதால், கைதான 4 பேருக்கும் வேறு ஏதேனும் கொள்ளையில் தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். மேலும் மாயாண்டி மீது திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு ஒன்றும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்