லாரிகள் மூலம் தண்ணீர் திருடும் கும்பல்

நொய்யல் பகுதியில் லாரிகள் மூலம் தண்ணீர் திருடும் கும்பல் குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-08 18:40 GMT

குடிநீர் வினியோகம் பாதிப்பு

கரூர் மாவட்ட வருவாய்த்துறையினர் கிணறுகளில் உள்ள தண்ணீரை எடுத்து விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு விற்பனை செய்யும் கிணற்று உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தனர். மேலும் கிணற்றில் இருந்து தொடர்ந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதால் விவசாயக் கிணறுகளில் உள்ள தண்ணீர் மிகவும் குறைந்து விவசாயம் பாதிக்கும்.

அதேபோல் குடிநீர் ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீரும் கீழ் மட்டத்திற்கு சென்று குடிநீர் வினியோகம் செய்வதும் பாதிக்கப்படும். எனவே அரசு அனுமதியின்றி தண்ணீரை விற்பனை செய்பவர்கள் மீதும், தண்ணீரை வாங்கி செல்பவர்கள் மீதும் கடும்நடவடிக்கை எடுக்கப் போவதாக வருவாய்த்துறையினர் கூறியுள்ளனர்.

அபாய சூழ்நிலை

இந்நிலையில் நொய்யல் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகில் கிணற்றில் இருந்து டேங்கர் லாரிகளுக்கு கிணற்றின் உரிமையாளர் தண்ணீரை விற்பனை செய்து வருகிறார்கள். லாரி மூலம் அந்தப் பகுதியில் இருந்து ஏராளமான நடை தண்ணீர் லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீரூற்று குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொது மக்களுக்கும் குடிநீர் வினியோகம் தடைபடும் அபாயமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ேகாரிக்கை

இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் தொடர்ந்து தண்ணீர் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தண்ணீர் விற்பனை செய்வதை கண்டித்து நொய்யல் குறுக்குச்சாலையில் பல மாதங்களுக்கு முன்பு ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீர் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த் துறையினர் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்டுள்ள லாரிகளை பறிமுதல் செய்து தண்ணீர் விற்பனை செய்யும் நபர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்