தனியார் வங்கி ஊழியரை காரில் கடத்தி தாக்கிய கும்பல்-என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது

நெல்லையில் கடன் பிரச்சினையில் தனியார் வங்கி ஊழியரை காரில் கடத்தி தாக்கிய என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-15 21:50 GMT

நெல்லையில் கடன் பிரச்சினையில் தனியார் வங்கி ஊழியரை காரில் கடத்தி தாக்கிய என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தனியார் வங்கி ஊழியர்

நெல்லை அருகே பாலாமடையைச் சேர்ந்தவர் விஜயபாண்டி (வயது 42). தனியார் வங்கி ஊழியர். இவருடைய மனைவி ஷோபா. இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு காரில் வந்த மர்ம கும்பல் திடீரென்று விஜயபாண்டியை காருக்குள் இழுத்து போட்டு கடத்தி சென்றது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷோபா, பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

காரை மடக்கி பிடித்த போலீசார்

இதையடுத்து விஜயபாண்டியை கடத்தி சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார், சுற்று வட்டார பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த கார், தச்சநல்லூரை அடுத்த வடக்கு சிதம்பராபுரத்தில் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து சென்று மடக்கினர்.

அப்போது காரில் விஜயபாண்டியை கடத்திய 3 மர்மநபர்களில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்ற 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

ரூ.7½ லட்சம் கடன்

விசாரணையில், அவர்கள் தாழையூத்து சாரதாம்பாள் நகரை சேர்ந்த செல்லத்துரை (39), என்ஜினீயர் ராஜேஷ் (32) என்பது தெரிய வந்தது. பைனான்ஸ், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் செல்லத்துரையிடம் ராஜேஷ் சேர்ந்து தொழில் செய்து வருகிறார்.

இவர்களிடம் வண்ணார்பேட்டையை சேர்ந்த பேராச்சி மகன் சக்தி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் செல்லத்துரைக்கும், விஜயபாண்டிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விஜயபாண்டி, நாங்குநேரியை சேர்ந்த ஜோதிபாஸ் என்பவருக்கு ரியல் எஸ்டேட் தொழிலுக்காக செல்லத்துரையிடம் ரூ.7½ லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், அதனை ஜோதிபாஸ் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் செல்லத்துரை பணத்தை திருப்பி கொடுக்குமாறு விஜயபாண்டியிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார்.

இதையடுத்து செல்லத்துரை உள்ளிட்டவர்கள் விஜயபாண்டியை காரில் கடத்தி உள்ளனர். பின்னர் அவரை கரையிருப்பு சிதம்பராபுரம் காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று தாக்கியது தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து செல்லத்துரை, ராஜேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய சக்தியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்