மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு-வினாடிக்கு 15,232 கனஅடி தண்ணீர் வருகிறது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 15,232 கனஅடி தண்ணீர் வருகிறது.

Update: 2023-07-28 20:54 GMT

மேட்டூர்:

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 200 கன அடிக்கு கீழ் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது.

இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அணைக்கு வினாடிக்கு 10,232 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

15 ஆயிரம் கனஅடி

இந்த நீர்வரத்தானது நேற்று மாலை வினாடிக்கு 15 ஆயிரத்து 232 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பைவிட அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் மாலை 64.80 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 65.01 அடியாக உயர்ந்துள்ளது. இந்த நீர்வரத்தானது மேலும் அதிகரிக்கும் நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு இதே நிலையில் நீடித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்