5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய பாசன ஏரி
5 ஆண்டுகளுக்கு பிறகு பாசன ஏரி நிரம்பியது.;
திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே உள்ள தெற்கு சித்தாம்பூரில் 160 ஏக்கர் பரப்பில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் அப்பகுதியில் உள்ள 350 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டாததால் அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்கு போதிய தண்ணீரின்றி சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த ஏரி தற்போது தண்ணீர் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கொல்லிமலை புளியஞ்சோலையில் இருந்து உருவாகும் ஐயாற்றில் சித்தாம்பூர் அருகே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஐயாற்றில் அதிக தண்ணீர் வரத்து உள்ள காலங்களில் தடுப்பணை மூலம் இந்த ஏரியானது நிரம்பும். இந்த ஏரி மூலம் சுற்றுப்பகுதிகளில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெற்று நெல், வாழை, கம்பு உள்ளிட்டவை சாகுபடி செய்து வந்தோம். கடந்த சில வருடங்களாக ஏரி நிரம்பாததால் விவசாயத்திற்கு சிரமப்பட்டு வந்தோம். தற்போது ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் இனி விவசாயம் செய்வதற்கு சிரமம் இருக்காது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து தண்ணீர் பற்றாக்குறை தீரும், என்றனர்.