வாலிபரை தாக்கி நிர்வாணமாக்கி செல்போனில் வீடியோ எடுத்த நண்பர் கைது
மயிலாடுதுறையில் வாலிபரை தாக்கி நிர்வாணமாக்கி செல்போனில் வீடியோ எடுத்த நண்பர் கைது;
தரங்கம்பாடி தாலுகா கீழையூர் செல்லக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் பிரபாகர் (வயது 25). கீழையூர் மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் கவின்குமார் (26). இவர்கள் இருவரும் நண்பர்கள்.. கவின்குமாரின் போக்கு பிடிக்காததால் கடந்த சில மாதங்களாக பிரபாகர், அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். கடந்த 14-ந் தேதி கீழையூரில் கருப்பசாமி என்பவர் இறந்து போனதால், அந்த இறுதி சடங்கில் பிரபாகர் கலந்து கொண்டுள்ளார். அப்போது அங்கு வந்த கவின்குமார் பிரபாகரின் செல்போனை பறித்துள்ளார். உடனே பிரபாகர் செல்போனை திருப்பி கேட்டபோது கவின்குமார் என் பின்னால் வா செல்போன் தருகிறேன் என்று கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பிரபாகர், கவின்குமாரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி சுடுகாடு அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை நிறுத்திய கவின்குமார் தான் மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டையால் பிரபாகரைதாக்கியுள்ளார். மேலும் பிரபாகரின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த பிரபாகர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பிரபாகர் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவின்குமாரை கைது செய்தனர்.