சிக்னல் கிடைக்காததால் நடுவழியில் நின்ற சரக்கு ரெயில்; ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்த வாகன ஓட்டிகள்
திண்டுக்கல்லில், சிக்னல் கிடைக்காததால் சரக்கு ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் தண்டவாளத்தை கடந்து சென்றனர்.;
திண்டுக்கல்:
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் அடுத்தடுத்து 3 ரெயில்வே கேட்டுகள் உள்ளன. திண்டுக்கல்லில் இருந்து திருச்சி, பழனி மார்க்கமாக செல்லும் ரெயில்கள் இந்த ரெயில்வே கேட்டுகளை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் இந்த கேட்டுகள் அடிக்கடி மூடப்படும். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து 3 ரெயில்வே கேட்டுகளையும் வாகன ஓட்டிகள் எளிதில் கடந்து செல்லும் வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணி தற்போது வரை நிறைவடையவில்லை.
இந்த நிலையில் இன்று திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரெயில் இரவு 8 மணி அளவில் பாலகிருஷ்ணாபுரம் முதல் ரெயில்வே கேட் அருகே வந்தது. அப்போது ரெயில்வே கேட் அருகே பொருத்தப்பட்ட 'சிக்னலில்' ரெயில் தொடர்ந்து செல்ல அனுமதி கிடைக்கவில்லை.
இதனால் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அதில் பொருத்தப்பட்டிருந்த கடைசி பெட்டி ரெயில்வே கேட்டை பாதி கடந்த நிலையில் நின்றிருந்தது. சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டதால் அந்த வழியாக மோட்டார் சைக்கிள்கள், கார்களில் வந்தவர்கள் கேட்டின் இருபுறமும் காத்திருந்தனர். ஆனால் சுமார் 15 நிமிடங்களுக்கும் மேல் 'சிக்னல்' கிடைக்காமல் ரெயில் அப்பகுதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் பொறுமையை இழந்த வாகன ஓட்டிகளில் சிலர் மோட்டார் சைக்கிள்களுடன் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து சென்றனர். அது காண்போரை அதிர்ச்சியடைய செய்யும் வகையில் இருந்தது. ஒருவேளை வாகன ஓட்டிகள் தண்டவாளத்தை கடக்கும் போது 'சிக்னல் கிடைத்து சரக்கு ரெயில் நகர்த்தப்பட்டிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.
ரெயில் நிறுத்தப்பட்டது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் மதுரை மார்க்கமாக செல்லும் ஒரு ரெயில், 4-வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த காரணத்தால் சரக்கு ரெயிலுக்கு ரெயில் நிலையத்துக்குள் வர அனுமதி கொடுக்க இயலவில்லை. அதனால் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் சிறிது நேரம் அந்த ரெயில் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.