காட்டு எருமை தாக்கி சிகிச்சை பெற்று வந்த வனக்காப்பாளர் சாவு
காட்டு எருமை தாக்கி சிகிச்சை பெற்று வந்த வனக்காப்பாளர் சாவு
புஞ்சைபுளியம்பட்டி
பவானிசாகர் வனச்சரகத்துக்குட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் வனக்காப்பாளராக பணிபுரிந்து வந்தவர் ரவிராஜ் (வயது 38). திருமணம் ஆகவில்லை. கடந்த 8-ந் தேதி இவரும், வேட்டை தடுப்பு காவலர் கார்த்தியும், பவானிசாகர் அருகே உள்ள சிங்கமலை காப்புக் காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு திடீரென வந்த காட்டு எருமை வனக்காப்பாளர் ரவிராஜை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.