புழல் பெண்கள் சிறையில் பெண் காவலரை அடித்து உதைத்த வெளிநாட்டு பெண் கைதி
புழல் பெண்கள் சிறையில் பெண் காவலரை அடித்து உதைத்த வெளிநாட்டு பெண் கைதி மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.;
சென்னையை அடுத்த புழல் பெண்கள் சிறையில் 150-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். உகாண்டா நாட்டைச் சேர்ந்த நசமா சரம் (வயது 35) என்ற பெண், திருப்பூர் மாவட்டத்தில் நடந்த மோசடி வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளார்.
பெண் கைதிகளுக்கு அவர்களுடைய உறவினர்கள் கொண்டு வந்து கொடுக்கும் பழங்கள், தின்பண்டங்கள் ஆகியவற்றை பெண் காவலர்கள் கைதிகளை வரிசையில் நிறுத்திவைத்து அவர்களிடம் கொடுப்பது வழக்கம்.
நேற்று காலை வழக்கம்போல் பெண் கைதிகளை வரிசையில் நிற்க வைத்து அவர்களுடைய உறவினர்கள் கொடுத்த பழங்களை பெண் காவலர் அயனிங் ஜனதா என்பவர் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது உகாண்டா நாட்டு பெண் கைதி வரிசையில் நிற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் வெளிநாட்டு பெண் கைதி நசமா சரமுக்கும், பெண் காவலர் அயனிங் ஜனதாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பெண் கைதி, பெண் காவலரை சரமாரியாக அடித்து உதைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பெண் கைதிகள், இருவரையும் விலக்கிவிட்டனர். இது குறித்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும் சிறை தரப்பில் புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், உகாண்டா நாட்டு பெண் கைதி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பெண் காவலரை வெளிநாட்டு பெண் கைதி அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.