லாலிரோடு சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும்

போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்பட்டு வருவதால் லாலிரோடு சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று திட்டக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-09-19 22:15 GMT

கோவை

போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்பட்டு வருவதால் லாலிரோடு சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று திட்டக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திட்டக்குழு கூட்டம்

கோவை மாவட்ட திட்டக்குழுவின் 2-வது கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவரும், திட்டக்குழு தலைவருமான சாந்திமதி அசோகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவரும், கலெக்டருமான கிராந்திகுமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் திட்டக்குழு உறுப்பினர்களான மாநகராட்சி மன்ற தலைவர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். கூட்டத்தில் திட்டக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

மேம்பாலம் வேண்டும்

கூட்டத்தில் திட்டக்குழு உறுப்பினர் கார்த்திக் செல்வராஜ் பேசும்போது, லாலிரோடு சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திட்டக்குழு தலைவர் சாந்திமதி அசோகன் பேசும்போது, கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் கொடுத்த 84 கோரிக்கைகளையும் கலெக்டரிடம் கலந்து ஆலோசித்து சம்மந்தப்பட்ட துறைக்கு பரிந்துரைக்காக அனுப்பப்பட்டுள்ளது. கோரிக்கைகளின் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அதன் விவரத்தை மாவட்ட திட்டக்குழுவிற்கு தெரிவிக்கவேண்டும் என்றார்.

ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

கலெக்டர் கிராந்தி குமார் பேசும்போது, மாவட்ட திட்டக்குழுவில் புதிய வளர்ச்சித் திட்டம் ஒன்றை தயார் செய்வதற்கு விவாதித்து, பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கும்போது தேவையான திட்டத்திற்கான கருத்துகள் பரிந்துரைகள் செய்யப்படும். இதன் மூலம் சிறந்த திட்டத்தை தயாரிக்க உதவியாக இருக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பாக, அடுத்த கூட்டத்தில் அக்கோரிக்கைகளின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவிக்கவேண்டும்.

இதனால் வளர்ச்சி திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியும். இதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்