சவுகார்பேட்டையில் வணிக வளாகத்தில் தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி அணைத்தனர்
சென்னை சவுகார்பேட்டையில் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.;
சென்னை சவுகார்பேட்டை மிண்ட் தெருவில் தனியாருக்கு சொந்தமான 3 மாடிகள் கொண்ட வணிக வளாகம் உள்ளது. இங்கு நகை கடை, ஜவுளி கடைகள் என 10-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தது.
நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென வணிக வளாகம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் வணிக வளாகத்தின் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வணிக வளாகத்தின் செக்யூரிட்டி அதிகாரி, இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக எழும்பூர், வேப்பேரி, திருவல்லிக்கேணி, வியாசர்பாடி, சைதாப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 9 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
அதிநவீன 'ஸ்கை லைடர்' தீயணைப்பு வாகனமும் கொண்டு வரப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.
இதனால் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்திக்கொண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வணிக வளாகத்தின் வெளியே சென்ற மின்சார வயர்களிலும் தீ முழுமையாக பற்றி எரியத்தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி காலை 6.30 மணியளவில் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
எனினும் தீ விபத்தில் வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர்.
தீ விபத்து சம்பவம் குறித்து யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அருகிலிருந்த டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ வணிக வளாகத்துக்கு பரவியதாக தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.