மானை சமைத்து சாப்பிட்ட 2 பேருக்கு ரூ.70 ஆயிரம் அபராதம்
தேவகோட்டை அருகே நாய் கடித்து இறந்த மானை சமைத்து சாப்பிட்ட 2 பேருக்கு ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தேவகோட்டை,
புள்ளிமான்
தேவகோட்டை அடுத்த கே.சிறுவனூர் அருகே உள்ளது வெளிக்கொண்டான் கிராமம். இந்த கிராமத்திற்குள் புள்ளிமான் ஒன்று புகுந்தது. இதை பார்த்த தெருநாய்கள் அந்த மானை துரத்தி, துரத்தி கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த புள்ளிமான் அப்பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவருடைய வீட்டின் அருகே இறந்து கிடந்தது.
இதை பார்த்த குப்புசாமி இறந்த மானின் உடலை தூக்கி சென்றார். மேலும் அவர் கே.சிறுவனூர் கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவரை அழைத்து மானை உரிக்க கூறினார். பின்னர் இருவரும் மான் கறியை சமைத்து சாப்பிட்டனர். அதன்பிறகு மீதம் இருந்த கறியை குப்புசாமி பதுக்கி வைத்திருந்தார்.
அபராதம்
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வன அலுவலர் பிரபாவுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் பார்த்திபன் மற்றும் வனத்துறையினர் குப்புசாமி வீட்டிற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். வனத்துறையினர் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த குப்புசாமி குடும்பத்தினர் வீட்டிலிருந்து மான் கறியை எடுத்து சென்று அருகில் உள்ள குளத்தில் கொட்டினர். அதில் சில மான் கறிகள் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தன. அதை வனத்துறையினர் சேகரித்து எடுத்தனர்.
பின்னர் கால்வாய் அருகே புதைத்து வைக்கப்பட்டிருந்த மானின் கால், தோல் ஆகியவற்றை மீட்டனர். இது தொடர்பாக வேலுச்சாமி, குப்புசாமி ஆகியோர் மீது காரைக்குடி வனச்சரக அலுவலர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு தலா ரூ.35 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தார்.