நாகர்கோவிலில் சாலையோரம் மனித கழிவு கொட்டிய வாகனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம்;மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவிலில் சாலையோரம் மனித கழிவுகளை கொட்டிய வாகனத்தை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.;
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் சாலையோரம் மனித கழிவுகளை கொட்டிய வாகனத்தை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மனித கழிவுகள் கொட்டிய வாகனம்
நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நாகர்கோவில் பதிவெண் கொண்ட செப்டிக் டேங்க் கிளீனிங் செய்யும் வாகனம் ஒன்று சென்றது.
அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட டிரைவர் திடீரென வாகனத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மனித கழிவுகளை சாலையோரத்தில் கொட்டினார்.
சிறைபிடிப்பு
இதனை பார்த்த பொதுமக்கள் ஆவேசம் அடைந்து அந்த வாகனத்துடன், டிரைவரை சிறைபிடித்தனர். பின்னர் இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நாகர்கோவில் மாநகர சுகாதார ஆய்வாளர் ராஜா மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
உடனே அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டிரைவரையும், வாகனத்தையும் மக்களிடம் இருந்து மீட்டனர்.
அபராதம்
பின்னர் இதுபற்றி நாகர்கோவில் மாநகர ஆணையர் ஆனந்த் மோகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அந்த வாகனத்தை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட டிரைவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
சாலையோரம் மனித கழிவு கொட்டிய வாகனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியது.
ஆலோசனை கூட்டம்
இதனை தொடர்ந்து கழிவுநீர் (செப்டிக் டேங்க்) வாகன உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆணையர் ஆனந்த் மோகன் தலைமை தாங்கினார். மாநகர் நல அதிகாரி ராம்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆணையர் ஆனந்த் மோகன் பேசுகையில் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகரில் செப்டிக் டேங்க் வாகனங்கள் கட்டாயம் உரிமம் பெற்று இருக்க வேண்டும். வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கழிவுகள் எடுக்கக் கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர், சம்மந்தப்பட்ட வீடு அல்லது வணிக நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அதாவது முதல் முறை ஈடுபட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 2-வது முறை என்றால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதேபோல் கழிவுகளை பொதுவெளியில் கொட்டினாலும் அபராதம் விதிக்கப்படும்.
ரூ.10 லட்சம் காப்பீடு
மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்யும் இடத்தில் மட்டுமே கழிவுகளை கொட்டவேண்டும். செப்டிக் டேங்க் பணியாளர்களை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிவுநீர் தொட்டிக்குள் இறக்க கூடாது. டிரைவர் மற்றும் பணியாளர்களுக்கு வாகன உரிமையாளர் தலா ரூ.10 லட்சம் தனி நபர் விபத்து காப்பீடு எடுத்திருக்க வேண்டும். இதையும் மீறி உரிமம் பெறாத மற்றும் விதிகளை மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.