உரிமம் இன்றி இயங்கிய தனியார் பஸ்சுக்கு ரூ.49 ஆயிரம் அபராதம்
பேரணாம்பட்டு அருகே உரிமம் இன்றி இயங்கிய பஸ்சுக்கு அதிகாரிகள் ரூ.49 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதனால் பஸ்சில் பயணம் செய்த பக்தர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.;
ரூ.49 ஆயிரம் அபராதம்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் வீ.கோட்டா ரோட்டில் வாணியம்பாடி வட்டார போக்கு வரத்து அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அமர்நாத், ராஜேஷ் கண்ணன் மற்றும் அலுவலர்கள் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநில பதிவெண் கொண்ட ஒரு பஸ்சில் கர்நாடக மாநிலத்திலிருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு பேரணாம்பட்டு வழியாக மேல்மருவத்தூருக்கு சென்ற பஸ்சை அதிகாரிகள் நிறுத்தி ஆய்வு செய்தனர்.
அதில் ஆந்திர மாநிலத்திற்கு மட்டும் உரிமம் பெற்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வாகன புதுப்பிப்புவரியாக ரூ.39 ஆயிரம் மற்றும் அபராத தொகை ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ49 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஆனால் கர்நாடக மாநிலம் சிக்பெல்லாபூரை சேர்ந்த பஸ் டிரைவர் விஜய் அபராதம் கட்ட மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
முற்றுகை
பஸ்சில் பயணம் செய்த பக்தர்களிடம் ஆதார் அட்டையை காண்பிக்குமாறு அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அவர்கள் ஆதார் அட்டையை தர மறுத்து பஸ் டிரைவர்க்கு ஆதரவாக அதிகாரிகளை சுமார் ஒரு மணி நேரம் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் மாற்று ஏற்பாடாக பேரணாம்பட்டு அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து பஸ் வரவழைத்து மேல்மருவத்தூர் செல்ல ஏற்பாடு செய்தனர். இதன் பின்னர் பஸ் டிரைவர் விஜய் கையெழுத்து போட்டு விட்டு தாங்கள் வந்த பஸ்சிலேயே பக்தர்களை மேல்மருவத்தூர்க்கு அழைத்து சென்றார்.