வாகன ஓட்டிகள் உள்பட 3 பேருக்கு ரூ.70 ஆயிரம் அபராதம்

சுற்றுலா பயணிகளை வனப்பகுதிக்கு அழைத்து சென்ற வாகன ஓட்டிகள் உள்பட 3 பேருக்கு ரூ.70 ஆயிரம் அபராதம் வித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.;

Update: 2022-06-26 16:26 GMT

வால்பாறை

சுற்றுலா பயணிகளை வனப்பகுதிக்கு அழைத்து சென்ற வாகன ஓட்டிகள் உள்பட 3 பேருக்கு ரூ.70 ஆயிரம் அபராதம் வித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

வனத்துறையினர் ரோந்து

வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட அய்யர்பாடியில் இருந்து கருமலை எஸ்டேட் செல்லும் சாலையில் நேற்று இரவு 10 மணியளவில் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வெள்ளமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த கலையரசன்(வயது 30), அய்யர்பாடி எஸ்டேட் பகுதியை சேர்ந்த ஜீவா(24) ஆகியோர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக தங்களது வாகனத்தில் சுற்றுலா பயணிகளை சவாரிக்கு அழைத்து வந்தது தெரியவந்தது. மேலும் அந்த வழியாக கரடி ஒன்று சென்றது. உடனே அவர்களை அங்கிருந்து செல்லும்படி வனத்துறையினர் எச்சரித்துவிட்டு சென்றனர்.

அபராதம்

சிறிது நேரம் கழித்து அதே பகுதிக்கு வனத்துறையினர் வந்தனர். அப்போதும் அவர்கள் அங்கு நின்று வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து கொண்டு இருந்தனர். இதையடுத்து கலையரசன், ஜீவா மற்றும் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதியை சேர்ந்த சரத்(42) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் வாகனங்களை பறிமுதல் செய்ததோடு ரூ.70 ஆயிரம் அபராதம் விதித்தனர். இனிமேல் சுற்றுலா பயணிகளை இரவு 10 மணிக்கு மேல் வனப்பகுதிக்கு அழைத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்