ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் சென்ற லாாிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

தோட்டியோட்டில் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் சென்ற லாாிக்கு போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.;

Update: 2023-07-26 18:45 GMT

நாகர்கோவில்:

தோட்டியோட்டில் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் சென்ற லாாிக்கு போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ஆம்புலன்சுக்கு வழிவிடாமல்...

குமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் போலீசார் வாகன சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர்கள் மீது அபராதம் விதித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் மேற்பார்வையில் குளச்சல் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீசார் தோட்டியோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியானது வில்லுக்குறியில் இருந்து தோட்டியோடு வரை ஒரு ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் வந்தது தெரியவந்தது.

அபராதம்

அதைத் தொடர்ந்து லாரி டிரைவரான முருகன் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மதுபோதையில் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் லாரியை முருகன் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து குடிபோதையில் வாகனம் இயக்குதல், ஆம்புலன்சுக்கு வழிவிட மறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரமும், ஆம்புலன்சுக்கு வழிவிடாததால் ரூ.10 ஆயிரமும் என் மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

குளச்சல் போலீஸ் துணை சரகத்தில் ஏற்கனவே இதுபோல ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் சென்ற ஒரு வாகனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுபற்றி இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் கூறுகையில், "குளச்சல் சரகத்தில் விபத்துக்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தினமும் வாகன சோதனை நடத்தி வருகிறோம். சாலையில் செல்லும் அவசர ஆம்புலன்சுகளுக்கு வாகன ஓட்டிகள் கட்டாயம் வழிவிட்டு செல்ல வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்ட கூடாது. சாலை விதிகளை கடைப்பிடித்து விபத்து இல்லாமல் வாகனம் ஓட்ட வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்