பிறந்து சில மணி நேரமே ஆன ஆண்சிசு பிணம் சாலையோரம் வீச்சு-கொலையா? போலீசார் விசாரணை
நெல்லை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண்சிசு பிணம் சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது. அந்த குழந்தை கொன்று வீசப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
இட்டமொழி:
நெல்லை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண்சிசு பிணம் சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது. அந்த குழந்தை கொன்று வீசப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பச்சிளம் ஆண்சிசு பிணம்
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ஆனையப்பபுரம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை சாலையோரம் பச்சிளம் ஆண்சிசு பிணமாக கிடந்தது. தொப்புள்கொடி கூட காயாத நிலையில் இருந்த அந்த குழந்தையின் உடலை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாககுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலையா?
அந்த குழந்தை பிறந்து சில மணி நேரமே ஆகி இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பருத்திப்பாடு கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி, மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். கள்ளக்காதலில் பிறந்ததால் அந்த குழந்தையை கொன்று அங்கு வீசிச்சென்றனரா? அல்லது இறந்து பிறந்ததால் அங்கு போட்டு சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அதை வீசிச்சென்றவர்கள் யார்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.