4 வயது மகனுடன் மின்சார ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற அரசு பெண் அதிகாரி
மூத்த மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் விரக்தி அடைந்த அரசு பெண் அதிகாரி, 4 வயது மகனுடன் மின்சார ரெயில் முன்பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். டிரைவர் ரெயிலை நிறுத்தியதால் இருவரும் காயத்துடன் உயிர் தப்பினர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் செந்தில் நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர், தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவருடைய மனைவி பிரேமலதா. இவர், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையில் அரசு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இவர்களுடைய 10 வயதான மூத்த மகனின் பிறந்த நாள் விழாவை அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து வீட்டில் வைத்து கொண்டாடினர். அப்போது அவர்கள் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் அவரது குடும்பத்தினர் பிரேமலதாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த மனவேதனையில் இருந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை 8 மணி அளவில் பிரேமலதா, தனது 4 வயது மகன் ஆயுஷ்வை தூக்கிக்கொண்டு ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு வந்தார். குடும்பத்தினர் திட்டியதால் மனவேதனையில் இருந்த பிரேமலதா, தனது மகனுடன் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் நடந்து சென்றார்.
அப்போது செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு மின்சார ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் குழந்தையுடன் பெண் நடந்து வருவதை கண்ட மின்சார ரெயில் என்ஜின் டிரைவர், ஹாரன் அடித்தார். ஆனாலும் அந்த பெண், குழந்தையுடன் தண்டவாளத்திலேயே நடந்து வந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த ரெயில் என்ஜின் டிரைவர், உடனடியாக ரெயிலை பிரேக் பிடித்து நிறுத்த முயன்றார். எனினும் மின்சார ரெயில் மெதுவாக சென்று தண்டவாளத்தில் நின்றிருந்த பிரேமலதா மற்றும் அவரது மகன் மீது மோதி நின்றது.
இதில் கீழே விழுந்த பிரேமலதா மற்றும் அவருடைய மகன் இருவருக்கும் தலையில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. நல்லவேளையாக ரெயில் அவர்கள் மீது ஏறாமல் நின்றுவிட்டதால் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அந்த இடத்துக்கு ஆம்புலன்சு வரமுடியாது என்பதால் ரெயிலில் இருந்த பயணிகள் உதவியுடன் தாய், மகன் இருவரையும் மீட்டு அதே ரெயிலில் ஏற்றிக்கொண்டு தாம்பரம் ரெயில் நிலையம் வந்தனர். வரும் வழியிலேயே 108 ஆம்புலன்சுக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பிரேமலதா மற்றும் அவருடைய மகன் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்றனர்.
மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் அரசு பெண் அதிகாரி, மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சரியான நேரத்தில் ரெயிலை சாதுர்யமாக நிறுத்தி 2 பேரின் உயிரை காப்பாற்றி ரெயில் என்ஜின் டிரைவரை ரெயில் பயணிகள் வெகுவாக பாராட்டினர். இதுபற்றி தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.