கடலூர் தனியார் நிறுவனத்தில் தீக்குளித்த பெண் ஊழியர் சாவு
கடலூர் தனியார் நிறுவனத்தில் தீக்குளித்த பெண் ஊழியர் உயிரிழந்தார்.;
நெல்லிக்குப்பம் வைடிப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். சாவடியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அலமேலு (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. பி.டெக். முடித்துள்ள அலமேலு செம்மண்டலம் சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு தயாரிக்கும் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். தினந்தோறும் வேலைக்கு வரும் போது அலமேலு தனது மகனையும் நிறுவனத்திற்கு அழைத்து வருவதும், மாலையில் 2 பேரையும் ஜெயச்சந்திரன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து செல்வதும் வழக்கம். அதன்படி சம்பவத்தன்று வேலை முடிந்து மாலையில் அவர்களை அழைத்துச்செல்வதற்காக ஜெயச்சந்திரன் வந்தார். அப்போது அவரது மகன் அங்குள்ள மேஜை மீது உட்கார்ந்து இருந்தான். இதை பார்த்த ஜெயச்சந்திரன், அலமேலுவிடம் மகன் கீழே விழுந்தால் என்ன செய்வது என்று கேட்டு, அவனை தூக்கிக்கொண்டு வெளியே வந்து விட்டார். இதனால் கோபமடைந்த அலமேலு, திடீரென அங்கிருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை காப்பாற்ற முயன்ற ஜெயச்சந்திரனும் காயமடைந்தார். இதையடுத்து 2 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மேல்சிகிச்சைக்காக அலமேலு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அலமேலு பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயச்சந்திரன் தொடர்ந்து கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.