கும்மிடிப்பூண்டி அருகே இறந்த மகனின் உடலை போலீசுக்கு தெரியாமல் வீட்டில் புதைத்த தந்தை

கும்மிடிப்பூண்டி அருகே உடல் நலக்குறைவால் இறந்த மகனின் உடலை போலீசுக்கு தெரியாமல் வீட்டின் பின்புறம் புதைத்த தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-10-06 09:26 GMT

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள பெருவாயல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீ (வயது 62). அவர் ஆரணி ஆற்றின் கரையோரம் வசித்து வருகிறார். இவரது மனைவி சாந்தி, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்தார். இவர்களது மகன் மணி (16) மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய ராஜீ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அக்கம் பக்கத்தினர் யாரிடமும் பேசாமல் தனிமையில் தவித்து வந்ததால் அவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களாக மகன் மணி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் இறந்ததாக தெரிகிறது.

இதனால் செய்வதறியாது திகைத்த தந்தை ராஜீ, தனது வீட்டின் பின்புறம் மகன் மணியின் உடலை தனி ஆளாக எடுத்துச்சென்று புதைத்து உள்ளார். புதைக்கப்பட்ட இடத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த தந்தை ராஜீயிடம் அக்கம்பக்கத்தினர் விசாரித்தனர். ராஜீ நடந்த சம்பவத்தை அக்கம்பக்கத்தினரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார். இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து நேற்று கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து புதைக்கப்பட்ட மணியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாருக்கு தெரியாமல் தந்தை இறந்த மகனின் உடலை வீட்டின் பின்னால் புதைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்