விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயி உடல் உறுப்புகள் தானம்

வேலூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயி உடல் உறுப்புகள் தானம்;

Update: 2022-07-25 13:49 GMT

வேலூர் அலமேலுமங்காபுரம் பேங்க்நகரை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 66), விவசாயி.

இவர் கடந்த 23-ந் தேதி மோட்டார் சைக்கிளில் பெருமுகை அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அவர் மூளைச்சாவு அடைந்தார். இதுகுறித்து அவருடைய குடும்பத்தினருக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பிரகாசத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அவருடைய மனைவி கலா, மகன்கள் பாலாஜி, ராஜசேகரன் ஆகியோர் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து பிரகாசத்தின் கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டன.

கல்லீரல், கண்கள் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் சென்னை எம்.ஜி.எம்., ஜெம் மருத்துவமனைக்கும் எடுத்து கொள்ளப்பட்டன.

சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட சிறுநீரகங்கள் உரிய ஏற்பாடுகளுடன் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த விபத்து குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்