மனைவி, குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனைவி, குழந்தைகளுடன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-10 12:42 GMT

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனைவி, குழந்தைகளுடன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப் சிங் தலைமை தாங்கினார். இதில் கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சுமார் 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை அவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மிராணி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தீக்குளிக்க முயற்சி

சேத்துப்பட்டு தாலுகா கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன், விவசாயி. இவரது மனைவி அஞ்சலிதேவி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று பார்த்திபன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

பின்னர் அவர் மறைத்து கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை திடீரென எடுத்து தன் மீதும், மனைவி மற்றும் குழந்தைகள் மீதும் ஊற்றிவிட்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து கேனை பிடுங்கி் அவர்கள் மீது போலீசார் தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து பார்த்திபனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசில் பொய் வழக்கு

அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு 4 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. எனது நிலத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். கிணறு வெட்டும் பணியை பக்கத்து நிலத்தை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிணறு வெட்டும்போது தங்கள் நிலத்தில் நில அதிர்வு ஏற்படுவதாக கூறி என ்மீது சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் பொய் புகார் கொடுத்ததனர்.

என் மீது போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாக கூறினார். பின்னர் அவர்களை போலீசார் மேல் விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தினால் சிறிது நேரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்