கிணற்றில் தவறிவிழுந்த கன்றுக்குட்டியை காப்பாற்ற முயன்ற விவசாயி தண்ணீரில் மூழ்கி பலி
ஊத்தங்கரை அருகே கிணற்றில் தவறிவிழுந்த கன்றுக்குட்டியை காப்பாற்ற முயன்ற விவசாயி தண்ணீரில் மூழ்கி பலியானார்.;
ஊத்தங்கரை:
கன்றுக்குட்டி தவறிவிழுந்தது
ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேரி ஊராட்சியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 37), லாரி டிரைவரும், விவசாயியுமான இவர் நேற்று தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது கன்றுக்குட்டி ஒன்று கிணற்றில் தவறி விழுந்து விட்டது. உடனே கன்றுக்குட்டியை காப்பாற்ற கிணற்றில் குதித்த நாகராஜ் உள்ளே சேற்றில் சிக்கி மூச்சு திணறி தண்ணீரில் மூழ்கிஉள்ளார்.
இதனிடையே அங்கு வந்த அவரது உறவினர்கள் நாகராஜின் செருப்பு மற்றும் உடைகள் கிணற்று மேல் பகுதியில் இருந்ததால் உடனடியாக கிணற்றில் குதித்து உயிருக்கு போராடிய கன்று குட்டியை காப்பாற்றினர்.
பலி
மேலும் கன்றுக்குட்டியை காப்பாற்ற நாகராஜ் கிணற்றில் குதித்து மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கிணற்றில் தீவிரமாக தேடிய போது, சேற்றில் சிக்கி நாகராஜ் பலியானது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த ஊத்தங்கரை போலீசார், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நாகராஜுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
கன்று குட்டியை காப்பாற்ற முயன்ற விவசாயி கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மூங்கிலேரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.