மோட்டார் சைக்கிளுடன் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

மேல்மலையனூர் அருகே மோட்டார் சைக்கிளுடன் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2023-08-10 18:45 GMT

மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அருகே மேல்செவளாம்பாடி குப்பத்தை சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மகன் திருமலை (வயது 45) விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் மேல்செவளாம்பாடி குப்பத்தில் இருந்து எய்யில் கிராமத்தை நோக்கி புறப்பட்டார். எய்யில் கிராம பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த விவசாய கிணற்றில் மோட்டார் சைக்கிளுடன் திருமலை தவறி விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே மேல்மலையனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பரஞ்ஜோதி தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி திருமலையை தேடினர். இதில் திருமலையை பிணமாக அவர்கள் மீட்டனர்.

போலீசார் விசாரணை

இதனிடையே இது குறித்த தகவலின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்