திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி விவசாயி தற்கொலை முயற்சி
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி விவசாயி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;
விவசாயி
திருவள்ளூர் அடுத்த பூண்டி அருகேயுள்ள கொரக்கத்தண்டலம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 31). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் திருவள்ளூர் அடுத்த எறையூர் பகுதியில் உள்ளது. தற்போது அந்த நிலத்தில் நெற்பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் அவரது உறவினர் ஒருவர் அந்த நிலத்தில் தங்களுக்கு உரிமை உள்ளது என கூறி தகராறு செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நெற்பயிரை டிராக்டர் கொண்டு உழுது சேதப்படுத்தி உள்ளார்.
நில ஆக்கிரமிப்பு
இதைத்தொடர்ந்து தனபால் தன் விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து இதற்கு தீர்வு காண அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த தனபால் நேற்று தனது தந்தை ஆறுமுகம் உடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனுஅளிக்க வந்தார். நேற்று திங்கட்கிழமை என்பதால் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
தற்கொலை முயற்சி
அப்போது தனபால் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு அவர் கையில் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறித்து அவரை தடுத்தனர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினார்கள். இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து டவுன் போலீசார் தனபாலையும் அவரது தந்தை ஆறுமுகத்தையும் விசாரணைக்காக திருவள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.