குன்றத்தூர் அருகே ஆஸ்பத்திரிக்குள் புகுந்து டாக்டருக்கு வெட்டு - மாமூல் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம்
குன்றத்தூர் அருகே மாமூல் கொடுக்க மறுத்த டாக்டரை ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வெட்டிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள பழந்தண்டலம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 26). பல் டாக்டரான இவர், திருமுடிவாக்கத்தில் சொந்தமாக பல் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். நேற்று கவுதம், ஆஸ்பத்திரியில் இருந்தபோது அங்கு வந்த கஞ்சா கர்ணா என்ற கருணாகரன் (23) மற்றும் அவருடன் வந்த மர்ம நபர்கள் 3 பேர் மறைத்து வைத்திருந்த கத்தியால் டாக்டர் கவுதமின் கை, கழுத்து, தலையில் வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் மயங்கிய கவுதமை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த செந்தமிழ் செல்வன், பல் டாக்டர் கவுதமை மிரட்டி ரூ.50 ஆயிரம் மாமூலாக தர வேண்டும் என கேட்டதாகவும், பணம் தர மறுத்ததால் தனது நண்பர்களை வைத்து அவரை கத்தியால் வெட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து குன்றத்தூர் போலீசார் செந்தமிழ்செல்வன், கருணாகரன் மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.