சதுரங்கப்பட்டினம் டச்சு கோட்டை வளாகத்தில் பாழடைந்து காட்சியளிக்கும் பழைய போலீஸ் நிலைய கட்டிடம்

சதுரங்கப்பட்டினம் டச்சு கோட்டை வளாகத்தில் சமூக விரோதிகளின் புகலிடமாக உள்ள பாழடைந்து காணப்படும் பழைய போலீஸ் நிலைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த தொல்லியல் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-08 12:19 GMT

டச்சு கோட்டை

செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினத்தில் உள்ளது, பழமை வாய்ந்த டச்சு கோட்டை. இந்த டச்சு கோட்டை வளாகம் முழுவதும் மத்திய தொல்லியல் துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. டச்சுக்காரர்கள் 14-ம் நூற்றாண்டில் இந்த பகுதியில் எழில்மிகு தோற்றத்தில் டச்சு கோட்டையை உருவாக்கி ஆட்சி புரிந்து வந்துள்ளனர். இவர்கள் அங்கு கடல் வழியாக வாணிபமும் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த டச்சு கோட்டை மைதானத்தில் தொல்லியல் துறை அனுமதியுடன் கடந்த ஒரு வருடம் முன்பு வரை குத்தகை அடிப்படையில் சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. பின்னர் தமிழக காவல் துறைக்கு ஒதுக்கப்பட்ட பொது நிதியில் சொந்தமாக புதிய கட்டிடம் கட்டப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூந்தண்டலம் பகுதிக்கு சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையம் மாற்றப்பட்டது.

கட்டிடத்தை இடித்து...

இதையடுத்து டச்சு கோட்டை வளாகத்தில் உள்ள பழைய போலீஸ் நிலைய கட்டிடம் எந்தவித பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் தற்போது அங்கு பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துகளின் புகலிடமாகவும், மது குடிக்கும் போதை ஆசாமிகள் மற்றும் சமூக விரோதிகளின் புகலிடமாகவும் மாறி சீரழிந்து காணப்படுகிறது. எனவே பாழடைந்து, சிதிலமடைந்து எதற்கும் பயன்படுத்தப்படாமல் உள்ள பழைய சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலைய கட்டிடத்தை இடித்து அங்கு தொல்லியல் துறைக்கு புதிய அலுவலக கட்டிடம் அல்லது டச்சு கோட்டையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு பயனள்ளதாக இருக்கும் வகையில் புதிய நவீன கழிப்பிட கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்