வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை
பவானிசாகர் வனப்பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதியை கண்காணிப்பதற்காக வனத்துறையினர் ரோந்து சுற்றி வருவது வழக்கம்.
அதன்படி நேற்று காலை பவானிசாகர் வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் கொத்தமங்கலம் வனப்பகுதியில் உள்ள சுஜில்குட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஓரிடத்தில் துர்நாற்றம் வீசியது.
யானை இறந்து கிடந்தது
இதையடுத்து வனத்துறையினர் துர்நாற்றம் வீசிய இடம் அருகே சென்றனர். அப்போது அங்கு ஒரு பெண் யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து உடனே சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கருக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து வனத்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் கால்நடை டாக்டர் அங்கு சென்று யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் குழி தோண்டி யானையின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. இறந்த யானைக்கு சுமார் 15 வயது இருக்கும். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே யானை எப்படி இறந்தது என தெரியவரும் என்று கால்நடை டாக்டர் தெரிவித்தார்.