மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை வழிமறித்து 5 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை வழிமறித்து 5 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு;
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை வழிமறித்து 5 பவுன் தங்கச்சங்கிலி பறித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மாமியார் வீட்டுக்கு சென்றார்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள தொம்பகுளத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாத் (வயது 37). கட்டிட காண்டிராக்டர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்துவிட்டு நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் தனது மனைவி மஞ்சு மற்றும் குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தொம்பக்குளம் நோக்கி சென்றார்.
அப்போது இனாம்கரிசல்குளம் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென விஸ்வநாத்-மஞ்சு தம்பதியை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கணவன்-மனைவி 2 பேரிடமும் கத்தியை காட்டி மிரட்டினர். மேலும் விஸ்வநாத் மனைவி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.
வலைவீச்சு
இதுகுறித்து விஸ்வநாத் வன்னியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்து தம்பதியை வழிமறித்து நகையை பறித்து சென்ற 3 நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.