திருப்போரூர் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் படுகாயம்
திருப்போரூர் அருகே தனியார் நிறுவன கட்டிடத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் படுகாயம் அடைந்தனர்.;
திருப்போரூர்,
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்துள்ள தண்டலம் கிராமத்தில் ஏரிக்கரை அருகே செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் பல மாதங்களாக செயல்படாமல் இருந்தது. மீண்டும் இந்த நிறுவனத்தில் பணிகளை தொடங்க திட்டமிட்டு அதற்காக அங்கு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியை சேர்ந்த சீனு (வயது 20) என்பவர் நேற்று காலை அந்த நிறுவனத்திற்கு வெளியே வளர்ந்திருந்த மரக்கிளையை வெட்டியபோது கையில் இருந்த கத்தி தவறி முள்புதரில் இருந்த பார்சலில் விழுந்தது. அந்த பார்சல் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் சீனு படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அருகில் மரக்கிளையை வெட்டி கொண்டிருந்த தினேஷ் என்பவரும் படுகாயம் அடைந்தார். இருவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். சீனுவுக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு, முகத்தில் காயம், ஒரு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.சம்பவ இடத்தில் மாமல்லபுரம் போலீசார் பரிசோதனை செய்தபோது அங்கு 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வெடிகுண்டுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி கீரப்பாக்கம் அருகே முருங்கமங்கலம் வெடிகுண்டு அகற்றும் மையத்திற்கு கொண்டு சென்றனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத இந்த பகுதியில் நாட்டு வெடிகுண்டு எப்படி வந்தது? சதி வேலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.