ஒளிரும் பலூன்களை பறக்க விட்ட கலெக்டர்
தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ஒளிரும் பலூன்களை கலெக்டர் பறக்க விட்டார்;
இலக்கிய செழுமைமிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் இலக்கிய திருவிழா நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி மிக பழமையான பொருநை நதி நாகரிகத்தை கொண்ட நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா இன்றும் (சனிக்கிழமை), நாளையும் 2 நாட்கள் நடைபெறுகிறது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து நடத்திவருகிறது. அதன்படி நெல்லை மாவட்டத்தின் பெருமைகளில் ஒன்றான பொருநை எனும் தாமிரபரணி ஆற்றின் மேல் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான சுலோச்சன முதலியார் பாலத்தின் அருகே வானில் ஒளிரும் மின்விளக்கு பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் மற்றும் தன்னார்வலர்கள், கல்லூரி, பள்ளி மாணவ -மாணவிகளுடன் இணைந்து பொருநை இலக்கிய திருவிழா தொடர்பாக வானில் ஒளிரும் பலூன்களை பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இரவு நேரத்தில் பல வண்ணத்தில் 110 ஒளிர்ந்த பலூன்கள் வானில் பறந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதனை சாலையில் சென்றவர்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.