வணிக கப்பல்களுக்கு வழிகாட்டிய சோழர் கால 'கலங்கரை விளக்கம்'

கோடியக்கரையில் வணிக கப்பல்களுக்கு வழிகாட்டிய சோழர் கால கலங்கரை விளக்கத்தின் எஞ்சிய பாகங்களாவது பாதுகாக்கப்பட வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2023-08-13 18:45 GMT


கோடியக்கரையில் வணிக கப்பல்களுக்கு வழிகாட்டிய சோழர் கால கலங்கரை விளக்கத்தின் எஞ்சிய பாகங்களாவது பாதுகாக்கப்பட வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வரலாற்று சின்னங்கள்

தமிழர்களின் பழம்பெருமையை பறைசாற்றும் சின்னங்கள் வெறும் கற்பனைகளாக மட்டுமின்றி நிகழ்கால சாட்சியங்களாக ஆங்காங்கே கண்முன் காட்சி தந்து வரலாற்றை நினைவுகூர்கின்றன. வரலாற்று சின்னங்கள் ஒருபுறம் நம்மை பெருமை அடைய செய்தாலும், அதன் தற்கால நிலையை பார்க்கையில் நாம் நம் உயரத்தை குறைத்து மதிப்பிட்டு விட்டோமோ? என்ற கவலையை மனதில் தோற்றுவிக்கிறது.

தமிழ் மன்னர்களான சோழர்கள் உலகம் முழுவதும் கோலோச்சிய காலம் உண்டு. அவர்கள உலகிற்கே வழிகாட்டிய காலமும் உண்டு. கிழக்கு, மேற்கு, தெற்கு என கடலால் சூழப்பட்ட இந்திய தீபகற்பம் முழுவதும் சோழர்களின் ஆட்சி நிலைநாட்டப்பட்டிருந்தது. ராஜராஜன் மற்றும் ராஜேந்திரன் காலத்தில் சோழப்பேரரசு கடல் கடந்தும் பரந்து விரிந்தது.

சோழர்களின் கடல்படை

சோழப்பேரரசின் தலைநகரங்களாக உறையூர், பழையாறை, தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் ஆகியன இருந்தன. வாணிப குழுக்கள் அமைத்தல், வெளிநாட்டுக்கு தூதுவர்களை அனுப்புதல், வெளிநாடுகளுடன் கடல் கடந்த வாணிபம், நீதி விசாரணை போன்றவற்றால் சோழ சாம்ராஜ்யத்தின் பெருமை உலகம் முழுவதும் பரவி இருந்தது. கி.பி. 9-ம் நூற்றாண்டில் இருந்து 12-ம் நூற்றாண்டு வரை சோழ சாம்ராஜ்ஜியம் வலுவாக இருந்ததற்கு கடல் படைக்கு முக்கிய பங்கு உண்டு.

கலங்கரை விளக்கம்

கடல் கடந்த வாணிபம், கடல் படை என கடல் பரப்பை ஆட்சி செய்வதிலும் சோழர்கள் சிறந்து விளங்கினர். நாகை அருகே உள்ள கோடியக்கரை இன்று வெறும் வனவிலங்கு சரணாலயமாக மட்டுமே அறியப்படும் நிலையில் ஒரு காலத்தில் அங்கு இருந்த கலங்கரை விளக்கம் தனது தீ பிழம்புகளால் சோழர்களின் வாணிப மற்றும் கடற்படை கப்பல்களுக்கு திசை காட்டியது என்றால் நம்ப முடிகிறதா?

அந்த பெருமை வாய்ந்த கலங்கரை விளக்கத்தில் தற்போது எஞ்சி உள்ள சிறிய பாகங்கள் அந்த பெரிய வரலாற்றை நம் கண்முன் விளக்கி காட்டுகின்றன. முதலாம் பராந்தக சோழனால் (கி.பி. 907-953) செங்கற்களால் இந்த கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. அந்த கால கட்டத்தில் விறகுகளை கொண்டு தீமூட்டி உயர எழுந்த தீ பிழம்புகளால் கப்பலோட்டிகளுக்கு திசையை உணர்த்தி உள்ளனர்.

காலப்போக்கில் சேதம்

ஆயிரம் ஆண்டுகளக்கு முன்பு 15 அடி உயரத்துக்கும் அதிகமாக இருந்த அந்த கலங்கரை விளக்கம் காலப்போக்கில் சேதம் அடைந்து, தற்போது தரை மட்டத்துக்கு சற்று உயரமாக காட்சி அளிக்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையால் சோழர் கால கலங்கரை விளக்கத்தின் கட்டமைப்பு பெரிய அளவில் சேதம் அடைந்தது.

கோடியக்கரையில் உள்ள இந்த சோழர் கால வரலாற்று பொக்கிஷத்ைத அனைவரும் கண்டு களிக்கும் வகையில் முறையாக பராமரிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து வரலாற்று ஆர்வலரும், கோடியக்கரை ஊராட்சி மன்ற தலைவருமான சுப்பிரமணியன் கூறியதாவது:-

கண்டுகொள்ளாத அளவுக்கு...

கோடியக்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் குறித்த தகவல்கள் சோழர் வரலாற்றை தழுவி எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களில் இடம் பெற்றுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கலங்கரை விளக்கத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து பெயரளவுக்கு பாதுகாத்தனர். இந்த தடுப்புகள் சில காலம் தான் தாக்குப் பிடித்தது. காலப்போக்கில் யாரும் கண்டுகொள்ளாத அளவுக்கு சென்றுவிட்டது.

கலங்கரை விளக்கத்தின் எஞ்சி உள்ள பாகங்களை பார்க்க செல்வதற்கு கூட போதுமான போக்குவரத்து வசதி கிடையாது. வனத்துறையினரிடம் அனுமதி பெற்று, அவர்கள் வாகனத்தில் தான் செல்ல வேண்டும். எளிதாக காண முடியாது என்பதால் இப்படி ஒரு இடம் இருக்கிறது என்று பெரும்பாலானோருக்கு தெரிவது இல்லை. இன்று நவீன முறையில் பல கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்பட்டாலும் சோழர் காலத்தில் கொடி நாட்டிய கலங்கரை விளக்கத்துக்கு எதுவும் ஈடாக முடியாது. சோழர் வரலாற்றை சொல்லும் இது போன்ற ஆதாரங்களை பொக்கிஷம்போல் பாதுகாக்க வேண்டும்.

வரலாற்று ஆதாரங்களை காப்பாற்ற வேண்டும்

கோடியக்கரையை சேர்ந்த ஜெயராஜன்:-

கோடியக்கரையில் சோழர்களால் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் காலப்போக்கில் சேதம் அடைந்து விட்டது. சுனாமிக்கு பிறகு முழுவதும் சேதம் அடைந்து அடிப்பகுதி மட்டுமே தெரியும்படி நிற்கிறது. இந்த கலங்கரை விளக்கம் சோழர் ஆட்சி காலத்தில் எப்படி சிறப்பாக செயல்பட்டது என்பதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். கடல் சீற்றத்தால் இந்த கலங்கரை விளக்கம் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது. தமிழர்களின் வரலாற்றை காப்பாற்ற வேண்டும் என்றால் இதுபோல சோழர் ஆட்சி கால ஆதாரங்களையும் பாதுகாக்க வேண்டும். இந்த கலங்கரை விளக்கத்தை சுற்றி கருங்கல்லை கொட்டி தடுப்பு அமைத்தால்தான் கடல் சீற்றத்தில் இருந்து கலங்கரை விளக்கத்தின் எஞ்சிய பாகங்களை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாகை மாவட்டமே ஒரு வரலாற்று பொக்கிஷம் தான். கோடியக்கரை கலங்கரை விளக்கத்தை போல ஏராளமான வரலாறு சார்ந்த ஆதாரங்கள் நாகை முழுவதும் உள்ளன. இவற்றை முறையாக பாதுகாக்க வேண்டும் எனதே வரலாற்று ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்