சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய மத்திய அரசு அதிகாரி மின்சாரம் தாக்கி பலி

ஆவடியில் சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய மத்திய அரசு அதிகாரி மின்சாரம் தாக்கி பலியானார்.

Update: 2022-11-22 06:14 GMT

மத்திய அரசு அதிகாரி

ஆவடி கவுரிபேட்டை பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 58). இவர், ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சி.வி.ஆர்.டி.இ.யில் அதிகாரியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சாந்தி. இவர், திருநின்றவூர் அடுத்த பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இவர்கள், ஆவடி ஜே.பி.எஸ்டேட் 4-வது தெருவில் புதிதாக ஒரு வீடு வாங்கி அதை பழுது பார்த்துக்கொண்டு இருப்பதால் நேற்று முன்தினம் மதியம் பால்பாண்டி அந்த வீட்டுக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. பால்பாண்டி வீட்டிலிருந்து வெளியே சென்றால் புதிதாக வாங்கி உள்ள வீட்டிலோ அல்லது அருகில் உள்ள உறவினர்கள் வீட்டிலோ தங்கி விடுவது வழக்கம். இதனால் பால்பாண்டி வீட்டுக்கு வராததை அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

இறந்து கிடந்தார்

இந்தநிலையில் நேற்று காலை புதிதாக வாங்கி உள்ள வீட்டின் வராண்டாவில் பால்பாண்டி இடுப்பில் ஈர துண்டை கட்டிய நிலையில், முகம் கருத்து, உடலில் கொப்புளங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஆவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

மின்சாரம் தாக்கி பலி

பால்பாண்டி உடலுக்கு அருகில் செல்போன் மற்றும் சார்ஜர் வயர் தொங்கியபடி இருந்தது. எனவே இடுப்பில் ஈரத்துண்டுடன், சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய பால்பாண்டி மின்சாரம் தாக்கி இறந்து இருக்கலாம் என தெரிகிறது.

பால்பாண்டி உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்த போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே பால்பாண்டி மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்