நர்சிங் மாணவி புகார் எதிரொலி: குமரி பாதிரியார் மீது வழக்கு பாய்ந்தது; தலைமறைவானவரை சைபர் கிரைம் போலீஸ் தேடுகிறது

நர்சிங் மாணவி புகார் காரணமாக குமரி பாதிரியார் மீது வழக்கு பாய்ந்தது. தலைமறைவான அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Update: 2023-03-16 19:13 GMT

நாகர்கோவில்,

நர்சிங் மாணவி புகார் காரணமாக குமரி பாதிரியார் மீது வழக்கு பாய்ந்தது. தலைமறைவான அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பாதிரியாரின் ஆபாச வீடியோ

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பாதிரியார் ஒருவரின் காதல் லீலைகள் என்ற பெயரில் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் வரும் பாதிரியாருக்கு 29 வயது தான் ஆகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் இவர் பணியாற்றி வந்துள்ளார்.

தேவாலயத்துக்கு வரும் பெண்களுடன் இவர் நெருக்கமாக இருந்துள்ளார். அதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பெண்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், சில பெண்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் தான் பாதிரியாரின் லீலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது அவரது லேப் டாப் மற்றும் செல்போனை சிலர் பறித்து சென்றுள்ளனர். அவர்கள் தான் செல்போனில் இருந்த பாதிரியாரின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.

நர்சிங் மாணவி புகார்

இதற்கிடையே தனக்கு பாலியல் ரீதியாக வாட்ஸ்-அப்பில் தொந்தரவு கொடுத்ததாக பேச்சிப்பாறை பகுதியை சோ்ந்த நர்சிங் மாணவி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், பாதிரியார் பணியாற்றும் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்வதற்காக சென்றேன். அப்போது என்னிடம் நன்றாக பழகினார். பின்னர் எனது வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு முதலில் ஆன்மிகம் பற்றி பேசினார். பின்னர் அவருடைய நடத்தையில் மாற்றம் ஏற்பட்டு ஆபாசமாக பேச தொடங்கினார். மேலும் வீடியோ கால் மற்றும் சாட்டிங் மூலம் எனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

மேலும், பாதிரியார் மீது மற்றொரு பெண்ணும் புகார் அளித்து இருக்கிறார். அதில், பாதிரியாரின் சூழ்ச்சியால் அவருடைய தந்தை கொடுத்த புகாரின் பேரில் என்னுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிரியாரின் லீலைகள் பற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் என்னிடம் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

வழக்குப்பதிவு

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நா்சிங் கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரில் பாதிரியார் மீது பெண்கள் வன்கொடுமை, சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் உள்பட 5 பிரிவின் கீழ் மாவட்ட ைசபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே பாதிரியார் தற்போது குமரி மாவட்டத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டார். அவர் வெளிமாநிலத்தில் பதுங்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அவரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் பாதிரியார் பணிபுரிந்த ஆலயத்திற்கு தற்போது வேறு ஒரு பாதிரியார் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்