விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு
விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து நெல்லை போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.;
நெல்லை மாவட்டம் அம்பையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பல்வீர் சிங் பொறுப்பேற்றார். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் பொறுப்பேற்ற பின்னர் அம்பை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. கல்லிடைக்குறிச்சி, அம்பை, விக்கிரமசிங்கபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட 30-க்கும் அதிகமானோர் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சட்டசபையில் எதிரொலித்தது
உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மீதான குற்றச்சாட்டுகளை தெரிவித்தவர்கள், தங்களின் பற்கள் பறிபோனதை காட்டி வீடியோவும் வெளியிட்டனர். அது வைரலானதால் தமிழக சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.
இதையடுத்து இந்த புகார் தொடர்பாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் கடந்த மாதம் 29-ந் தேதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், அம்பை போலீஸ் சரகத்தில் பணியாற்றி வந்த போலீசார் 8 பேர் ஆயுதப்படைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
2-ம் கட்ட விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை உயர்மட்ட விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. அவர் கடந்த 10-ந் தேதி அம்பை தாலுகா அலுவலகத்தில் தனது விசாரணையை தொடங்கினார். ஆனால் அன்றைய தினம் யாரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து 2-ம் கட்ட விசாரணையை நேற்று அவர் மீண்டும் தொடங்கினார். அப்போது அம்பை தாலுகா அலுவலகத்தில் இருந்த போலீசார் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து 10 பேர் விசாரணை அதிகாரி அமுதா முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
3 பிரிவுகளில் வழக்கு
இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது, இந்திய தண்டனை சட்டம் 324 (மரணத்தை விளைவிக்கும் வகையில் ஆயுதத்தால் தாக்குதல்), 326 (கொடுங்காயங்களை ஏற்படுத்துதல்) மற்றும் 506(1) (குற்றவியல் மிரட்டல்) ஆகிய ஜாமீன் கிடைக்காத பிரிவுகளின் கீழ் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று அவர் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.