அரசு கையகப்படுத்திய நிலத்தை விற்க ஒப்பந்தம் செய்து மோசடியில் ஈடுபட்டவர் மீது வழக்கு

gஅரசு கையகப்படுத்திய நிலத்தை விற்க ஒப்பந்தம் செய்து மோசடியில் ஈடுபட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-11 18:56 GMT

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள குறிச்சி காலனி தெருவை சேர்ந்தவர் மணிவேல்(வயது 64). இவரது நண்பர் உடையார்பாளையம் அருகே உள்ள த.பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்த சங்கர். இவர் தனது குடும்ப அவசர தேவைக்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு மனகதி கிராமத்தில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்தை மணிவேலுக்கு கிரைய ஒப்பந்தம் செய்து கொடுத்து ரூ.6 லட்சம் கடன் பெற்றுள்ளார். பின்னர் நிலத்தை கிரையம் செய்து கொடுக்காமல், வாங்கிய பணத்தையும் திரும்ப கொடுக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முன்னிலையில் ஆஜராகி 2 மாதத்திற்குள் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் 7 ஆண்டுகள் கழிந்த பின்னும் பணத்தையும் கொடுக்காமல், நிலத்தையும் கிரையம் செய்து கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் கிரைய ஒப்பந்தம் எழுதிக் கொடுத்த நிலம் ஏற்கனவே அரசு சாலை பணிக்காக கையகப்படுத்தி விட்டதாகவும், ஏமாற்றும் நோக்கத்துடன் கிரைய ஒப்பந்தம் போட்டதும் மணிவேலுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிவேல் இது குறித்து சங்கர் வீட்டில் சென்று கேட்டபோது, அவர் மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து தா.பழூர் போலீசில் மணிவேல் கொடுத்த புகாரின்பேரில் சங்கர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்