தாம்பரத்தில் சாலையோரம் நிறுத்தி இருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

தாம்பரத்தில் சாலையோரம் நிறுத்தி இருந்த கார் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் கொடுத்தும் தீயணைப்பு வாகனம் வராததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-10-26 03:22 IST

தாம்பரம்,

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் எம்.இ.எஸ். சாலையில் நேற்று முன்தினம் இரவு சாலையோரம் நிறுத்தி இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.ஆனால் ஒரு மணி நேரமாகியும் தீயணைப்பு வீரர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்களே ஒன்று சேர்ந்து வாளிகளில் தண்ணீரை கொண்டு வந்து காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

பொதுமக்கள் சாலை மறியல்

இதற்கிடையில் தீ விபத்து குறித்து தகவல் கொடுத்தும் தீயணைப்பு வீரர்கள் வராததால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், அந்த பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சேலையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இதனை தனது செல்போனில் வீடியோ எடுத்த வாலிபரின் செல்போனை பறித்த சப்-இன்ஸ்பெக்டர், அவரையும் ஒருமையில் பேசினார்.

"தீ விபத்து ஏற்பட்டு நீண்டநேரம் ஆகியும் தீயணைப்பு வீரர்கள் வரவில்லை என நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் அதற்கு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் எங்களை மிரட்டுகிறார்" என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கன்னத்தில் அறைந்தார்

இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடம்பாக்கம் கோவிலுக்கு சென்ற ஒருவர், தனது இருசக்கர வாகனத்தை சாலையாரம் நிறுத்தி சென்றார். இதற்காக அவரை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் நடுரோட்டில் அவரது கன்னத்தில் அறைந்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுமக்களிடம் தொடர்ந்து இதுபோல் அநாகரீகமாக நடந்து வரும் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்