கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-11-03 08:15 GMT

சென்னையை அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அஜய் (வயது 32). இவர், கிண்டியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது நண்பருடன் காரில் வீட்டுக்கு சென்றார். கத்திப்பாரா மேம்பாலத்தில் வந்தபோது திடீரென கார் பழுதடைந்தது. இதனால் காரை மீண்டும் அலுவலகத்துக்கே எடுத்துச்செல்ல முயன்றார். இதற்காக கத்திப்பாரா மேம்பாலத்தில் அசோக் நகர் நோக்கி சென்றபோது, திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காரை மேம்பாலத்தின் ஓரமாக நிறுத்திய அஜய், தனது நண்பருடன் கீழே இறங்கினார். அதற்குள் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. அந்த நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும் காரில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அசோக் நகர், கிண்டி தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.

இதனால் கத்திப்பாரா மேம்பாலத்தில் அசோக் நகர் செல்லும் பாதையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்