தீ வைத்து எரிக்கப்பட்ட கட்டிட மேஸ்திரி சிகிச்சை பலனின்றி சாவு

வேலூர் அருகே குடும்ப தகராறில் மனைவி தீ வைத்து எரித்த கட்டிட மேஸ்திரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.

Update: 2023-05-18 16:58 GMT

குடும்ப தகராறில் தீ வைப்பு

வேலூரை அடுத்த இலவம்பாடி கிராமம் கருநிகர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி லதா (29). இவர்களுக்கு 9 மற்றும் 7 வயதில் 2 மகள்கள், 5 வயதில் ஒரு மகன் உள்ளனர். சுரேசுக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்தாகவும், அதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி இரவில் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சுரேஷ் மனைவியை தாக்கி உள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த லதா, வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து வந்து சுரேஷ் மீது ஊற்றி தீவைத்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அதனால் அலறி துடித்த சுரேசின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து தீயை அணைத்து சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விரிஞ்சிபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து லதாவை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சுரேஷ் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.

குடும்ப தகராறில் கணவனை தீ வைத்து எரித்த வழக்கில் மனைவி ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில், கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனால் தாய், தந்தை இன்றி 2 மகள்கள், மகன் பரிதவித்தனர். அவர்களை சுரேசின் உறவினர்கள் வளர்ப்பதாக அழைத்து சென்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்