மார்த்தாண்டத்தில் மரக்கிளை முறிந்து விழுந்தது - கார் சேதம்
மார்த்தாண்டத்தில் வேப்பமரக்கிளை முறிந்து விழுந்ததில் கார் சேதம் அடைந்தது.;
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் வேப்பமரக்கிளை முறிந்து விழுந்ததில் கார் சேதம் அடைந்தது.
பலத்த காற்று
குமரி மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் இருந்து மழையுடன் பலத்த காற்று வீசியது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.
அதே போல் மார்த்தாண்டம், குழித்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததுடன் பலத்த காற்று வீசியது. மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கு காலையிலேயே மாணவ-மாணவிகள் வந்து விட்டனர். அங்கு வகுப்பு நடந்து கொண்டிருந்தது.
மரக்கிளை முறிந்தது
இந்த பள்ளியின் முன்பு நின்ற வேப்பமரத்தின் பெரிய கிளை 10 மணி அளவில் முறிந்து விழுந்தது. இதில் சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த ஆயிரம் தெங்கு பகுதியை சேர்ந்த ரெத்தினமணி என்பவருடைய வாடகை கார் சேதமடைந்தது. மழை பெய்து கொண்டு இருந்ததால் அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கிளையை அகற்றினர்
சத்தம் கேட்டு பள்ளி தலைமை ஆசிரியர் சசிகுமார் மற்றும் ஆசிரியர்கள் அங்கு வந்தனர். அவர்கள் அந்த பகுதியில் இருந்தவர்களின் உதவியுடன் முறிந்து விழுந்த மரக்கிளையை வெட்டி அகற்றினார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், மார்த்தாண்டம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து அந்தப் பகுதியில் போக்குவரத்தை சீர்படுத்தினார்கள்.
ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்பு மழை பெய்த போதும் மரத்திலிருந்து ஒரு கிளை முறிந்து விழுந்தது.
எனவே பழமையான அந்த வேப்ப மரத்தால் அசம்பாவிதம் நடைபெறும் முன் அதை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.