நெருஞ்சிப்பேட்டை கதவணையில் வெடிபொருள் வீசி மீன் பிடித்தபோது காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் உடல் சிதறி பலி-மீனவர் கைது
நெருஞ்சிப்பேட்டை கதவணையில் வெடிபொருளை வீசி மீன் பிடித்தபோது, காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் உடல் சிதறி பலியானார். இதுதொடர்பாக மீனவரை போலீசார் கைது செய்தனர்.;
எடப்பாடி:
வெடி பொருட்கள்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே நெருஞ்சிப்பேட்டை கதவணை உள்ளது. இந்த கதவணை பகுதியில் தினமும் ஏராளமான மீனவர்கள் பரிசலில் சென்று மீன் பிடித்து வருகின்றனர். சிலர் வெடி பொருட்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று மாலை பூலாம்பட்டியை அடுத்த ஊத்துக்குளி காடு பகுதியை சேர்ந்த பெருமாள் என்கிற முருகன் (வயது 40) என்ற மீனவர், கதவணை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவர் பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் டெட்டனேட்டர் என்ற வெடி பொருளை பயன்படுத்தி மீன் பிடித்தார்.
வாலிபர் உடல் சிதறி பலி
அவர் ஒரு டெட்டனேட்டரை தண்ணீரில் தூக்கி வீசினார். அப்போது அங்கு காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த வாலிபர் ஒருவர் உடல் சிதறி பலியானார். அந்த வாலிபருடன் குளித்து கொண்டிருந்த மற்றொருவர் இதனை பார்த்து கூச்சலிட்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் பிணமாக மிதந்த வாலிபரின் உடலை மீட்டு, பூலாம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே அங்கிருந்து மீனவர் முருகன் தப்பி ஓடிவிட்டார்.
போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வெடிபொருள் வெடித்து பலியான வாலிபர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவரங்காடு ஒட்டமெத்தையை சேர்ந்த முருகன் மகன் மோகன்குமார் (22) என்பதும், பூலாம்பட்டி அருகே ஆனைப்புலிகாடு பகுதியை சேர்ந்த மாதையன் என்பவர் வீட்டுக்கு விருந்தாளியாக வந்ததும் தெரியவந்தது.
மீனவர் கைது
மேலும் வாலிபர் மோகன்குமார் தனது நண்பரான பள்ளிபாளையத்தை சேர்ந்த பூபதி என்பவருடன் கதவணை பகுதியில் காவிரி ஆற்றில் குளித்தபோது, பலியானதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் மோகன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பி ஓடிய மீனவர் முருகனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, டெட்டனேட்டர் அவருக்கு கிடைத்தது எப்படி? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் குளித்தபோது, மீனவர் வீசிய வெடிபொருள் வெடித்து வாலிபர் பலியான சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.