குடியிருப்பு பகுதியில் குட்டியுடன் சுற்றித் திரிந்த கரடி
பாபநாசம் அருகே குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று தனது குட்டியுடன் சுற்றித் திரிந்தது.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. பொதுவாக தண்ணீர் மற்றும் உணவுக்காக இந்த விலங்குகள் அவ்வபோது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்புகள், விளைநிலங்களுக்குள் செல்கின்றன.
இந்த நிலையில் பாபநாசத்தில் இருந்து காரையார் செல்லக்கூடிய மலைப்பாதையில் கீழணை பகுதி உள்ளது இங்கு ஏராளமான மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இதற்கிடையே அங்கு இரவு நேரத்தில் குட்டியுடன் கூடிய கரடி சுற்றி திரிந்துள்ளது. இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இரவு நேரத்தில் கரடி உலா வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மின்சார துறை ஊழியர்கள், அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர்.