சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுத்து வைக்கப்பட்ட பதாகை

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுத்து வைக்கப்பட்ட பதாகையை அகற்ற முயன்ற அதிகாரிகளுடன் தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-24 21:53 GMT

சிதம்பரம், 

ஆனி திருமஞ்சன விழா

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி திருமஞ்சன விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், நாளை(திங்கட்கிழமை) ஆனித் திருமஞ்சன விழாவும் நடைபெற உள்ளது. இதற்கிடையே நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி 24-ந் தேதி(அதாவது நேற்று) முதல் 27-ந் தேதி (நாளை மறுநாள்) வரை கனகசபையின் மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்ற வாசகத்துடன் கூடிய பதாகையை கனகசபை நுழைவு வாயில் அருகே வைத்திருந்தனர்.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்

இதை பார்த்து ஆத்திரமடைந்த சில தீட்சிதர்களும், பக்தர்களும் பதாகையை அகற்றக்கோரியும், பக்தர்கள் அனைவரும் கனக சபையில் ஏறி வழிபட அனுமதிக்க வலியுறுத்தியும் இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

அதன்பேரில் தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா தலைமையில் தாசில்தார் செல்வகுமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், பொன்மகரம் மற்றும் அதிகாரிகள் தீட்சிதர்களிடம் அந்த பதாகையை அகற்ற வேண்டும் என்றும், பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார், தீட்சிதர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நகைகளுக்கு பாதுகாப்பு

இதுகுறித்து நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சிவராம தீட்சிதர் கூறுகையில், நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழா இன்னும் 4 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் முக்கிய பூஜைகள் நடைபெறுவதாலும், நகைகள் உள்ளே இருப்பதாலும் 4 நாட்கள் மட்டும் கனகசபையில் ஏற அனுமதிக்கவில்லை. நகைகள் திருட்டு போனால் நிர்வாகம் தான் பொறுப்பு.

அதன் பாதுகாப்பு கருதி தான் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என பதாகைகள் வைத்துள்ளோம். மேலும் நாங்கள் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரியிடம் பேசி அனுமதி பெற்று தான் பதாகைகளை வைத்தோம். அவர்கள் வைக்கக் கூடாது என்றால் நாங்கள் உடனே அதை அகற்றி விடுவோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்