நத்தம் அருகே காட்டெருமை தாக்கி பேக்கரி கடைக்காரர் சாவு
நத்தம் அருகே காட்டெருமை தாக்கி பேக்கரி கடைக்காரர் இறந்துபோனார்.;
நத்தம் அருகே கோபால்பட்டியை சேர்ந்தவர் பெத்துராஜ் (வயது 47). இவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த 7-ந்தேதி பெத்துராஜ் தனது மோட்டார் சைக்கிளில் அலங்காநல்லூர் வழியாக மதுரை சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் கோபால்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
நத்தம் அருகே முளையூர்-எல்லப்பாறை பிரிவு பகுதியில் வந்தபோது, எதிரே வந்த காட்டெருமை ஒன்று மோட்டார் சைக்கிளையும், பெத்துராஜையும் தாக்கிவிட்டு ஓடியது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பெத்துராஜை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பெத்துராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.