கட்டிட காண்டிராக்டர் கொலை; ஆட்டோ டிரைவர் போலீசில் சரண்
வத்தலக்குண்டுவில் கட்டிட காண்டிராக்டர் கொலை சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் போலீசில் சரணடைந்தார்.;
வத்தலக்குண்டுவை அடுத்த பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 35). கட்டிட காண்டிராக்டர். இவர் நேற்று முன்தினம் வத்தலக்குண்டுவில், திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் பெட்ரால் விற்பனை நிலையத்தின் பின்புறம் காட்டுப்பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதேபோல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான தனிப்படையினரும் கொலை செய்த நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் வத்தலக்குண்டு அருகே உள்ள எம்.வாடிப்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான பாலமுருகன் என்பவர் பாண்டியராஜன் கொலை செய்ததாக வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். இதையடுத்து அவரை நிலக்கோட்டை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.