பணி ஓய்வு பெறும் நாளுக்கு முன்பாக தலைமைச்செயலாளரிடம் கோரிக்கை வைத்த 6ம் வகுப்பு மாணவன்...!

தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற உள்ள நிலையில், 6ம் வகுப்பு மாணவன் உணர்ச்சிப்பூர்வமான கடிதம் ஒன்றை எழுதி அவரை நெகிழ வைத்துள்ளார்.

Update: 2023-06-29 10:41 GMT

சென்னை,

தமிழக தலைமைச் செயலாளராக உள்ள வெ.இறையன்பு இம்மாதத்துடன் ஓய்வுபெறவுள்ளார். இந்நிலையில், சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர் இறையன்பு, தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், வணக்கம் ஐயா, என் பெயர் இறையன்பு . நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். என் அண்ணன் பெயர் ஆதித்யா. கல்லூரியில் படித்து வருகிறார். தாங்கள் பணியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக என் பெற்றோர்கள் மூலம் நான் அறிந்து கொண்டேன். என் அம்மாவும், அப்பாவும் தங்கள் பெயரையே எனக்கு வைத்துள்ளனர். உங்களை போலவே நான் பிறரிடம் அன்பாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார்கள். நானும் அப்படி இருக்க முயற்சி செய்வேன். நான் வருப்பில் நன்றாக படிப்பேன். என் அம்மாவின் மூலம் தங்களின் சில நகைச்சுவை கதைகளை கேட்டுள்ளேன்.

ஐயாநானும் எனது நண்பர்களும் மாலை நேரங்களில் விளையாடுவோம். எங்கள்தெரு மழைக்காலங்களில் மிகவும் குண்டும் குழியாகவும் மாறி விடுகிறது. நடப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. பலர் வழுக்கி விழவும் நேரிடுகிறது. தயவுகூர்ந்து எங்கள் தெருவிற்க்கு சாலை வசதி செய்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் எழுதி தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு கோரிக்கை வைத்துள்ளார் .

இந்த கடிதத்தை பார்த்த தலைமை செயலாளர் இறையன்பு, இன்று பிற்பகல் 3 மணியளவில் அந்த மாணவனை சந்திக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த கடிதம் ஆறாம் வகுப்பு மாணவர் எழுதிய இந்த கடிதம், இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மாணவனின் இந்த கடிதத்தை பார்த்த தலைமை செயலாளர் இறையன்பு தலைமைச்செயலகத்தில் பிற்பகல் 3 மணி அளவில் கடிதம் எழுதிய மாணவரை சந்தித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்