பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3 வயது பெண் குழந்தை கொலை
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் தாய் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தகாத உறவு
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 19). இவர் மதுரை மாவட்டம் அய்யூரில் உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வந்தார். ஜெகனுக்கும் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அந்த பெண் கடந்த 6 மாதத்திற்கு முன்பு குடும்பத்தகராறு காரணமாக தனது கணவரை பிரிந்து தனது 3 வயது குழந்தையுடன் கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து மதுரைக்கு வந்தார். அங்கு செங்கல் சூளையில் ெஜகனுடன் தங்கி வேலை செய்து வந்தார்.
குழந்தைக்கு பாலியல் தொந்தரவு
இந்தநிலையில் ஜெகனை பார்க்க அவருடைய உறவினர் பழனியப்பன்(28) செங்கல்சூளைக்கு வந்தார். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், குழந்தைக்கு பழனியப்பன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த குழந்தையின் தாயார் ஜெகனிடம் நடந்த விவரங்களை கூறி பழனியப்பனை வீட்டில் இருந்து அனுப்பும்படி கூறியுள்ளார்.இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இந்த குழந்தையால்தான் நமக்கு பிரச்சினை என்று கூறிய ஜெகன் குழந்தையை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. பின்னர் 3 பேரும் மதுரையில் இருந்து குழந்தையுடன் ஊருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது செல்லும் வழியில் குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
குழந்தை சாவு
இதைதொடர்ந்து அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு முதலுதவிசிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 1-ந்தேதி குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தையின் தாய் உள்பட 3 பேரும் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
குழந்தையின் தாய் உள்பட 3 பேர் கைது
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் குழந்தை நல பாதுகாப்பு பிரிவினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தஸ்தகீர் கொடுத்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் குழந்தையின் தாய் ஈரோட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் விராலிமலை போலீசார் அங்கு சென்று குழந்தையின் தாயை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், மேலும் குழந்தையின் இறப்பில் தொடர்புடைய ஜெகன் மற்றும் பழனியப்பனை விராலிமலை போலீசார் கைது செய்து விராலிமலைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.