கார் மோதி 3 மாத குழந்தை பலி

செம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 மாத குழந்தை பலியானது.

Update: 2022-10-05 19:00 GMT


திண்டுக்கல் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அன்புச்செல்வன் (வயது 28). இவர், திண்டுக்கல்லில் செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர், தனது மனைவி விஜயலட்சுமி (26), மகள்கள் சாய்பிரதிஷா (4), குருசாவிதா (3 மாதம்) ஆகியோருடன் வத்தலக்குண்டுவில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பின்னர் அன்றையதினம் இரவு 7 மணி அளவில் வத்தலக்குண்டுவில் இருந்து திண்டுக்கல் நோக்கி மோட்டார் சைக்கிளில் அவர்கள் வந்துகொண்டிருந்தனர். செம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில், பாளையங்கோட்டை பிரிவு பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.

அப்போது திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

குழந்தை பலி

இந்த விபத்தில் அன்புச்செல்வன் உள்பட 4 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை குருசாவிதா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தது.

தங்களின் குழந்தை இறந்தது கூட தெரியாமல் அன்புச்செல்வன், விஜயலட்சுமி, சாய்பிரதிஷா ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து செம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கைக்குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


Tags:    

மேலும் செய்திகள்