பிளாஸ்டிக் கேனை முதுகில் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்த 10-ம் வகுப்பு மாணவர் பலி

பிளாஸ்டிக் கேனை முதுகில் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்த 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-06-26 10:46 GMT

பள்ளி மாணவர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் நாராயணபுரம் ஊராட்சியை சேர்ந்த எக்னாபுரம் வடமலை நகரை சேர்ந்தவர் விஜயகுமார். விவசாயி. இவரது மகன் பிரகாஷ் (வயது 15). அம்மையார் குப்பம் அரசினர் மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை நாள் என்பதால் பிரகாஷ் தனது பெரியப்பா ஜெய்சங்கர் என்பவரின் மகன்கள் 9-ம் வகுப்பு மாணவர் சந்தோஷ் (14), பிளஸ்-1 மாணவர் தயாநிதி (16) ஆகியோரை அழைத்துகொண்டு சொந்த நிலத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.

பிணமாக மீட்டனர்

அவர்கள் 3 பேரும் 10 லிட்டர் கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் கேன்களை முதுகில் கட்டிக்கொண்டு 50 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்தனர். அப்போது எதிர்பாராத வகையில் பிரகாஷ் முதுகில் கட்டியிருந்த பிளாஸ்டிக் கேன் உடைந்ததால் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த மற்ற சிறுவர்கள் உடனடியாக மேலே வந்து கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கிணற்றில் குதித்து சிறுவனை காப்பாற்ற முயன்றனர்.

கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து தகவல் கிடைத்ததும் சோளிங்கரிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் குதித்து பிரகாஷை பிணமாக மீட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் ஆர்.கே. பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளி மாணவர் பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்