நாமக்கல் நகராட்சியில் 98 டன் குப்பைகள் அகற்றம்

நாமக்கல் நகராட்சியில் ஆயுத பூஜையையொட்டி குவிந்த 98 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

Update: 2023-10-24 19:00 GMT

நாமக்கல் நகராட்சியில் ஆயுத பூஜையையொட்டி குவிந்த 98 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

வாழை மரங்கள்

நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. சுமார் 1.40 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தினசரி குப்பைகள் வீடு, வீடாக சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் ஆயுதபூஜை லாரி பாடிகட்டும் நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதேபோல் வீடுகளையும் சுத்தம் செய்து பொதுமக்கள் ஆயுதபூஜையை கொண்டாடினர். பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் வாழை மரங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.

இந்த வாழை மரங்கள் மற்றும் தோரணங்களை ஆங்காங்கே சாலையோரம் போட்டுவிட்டு சென்று விட்டனர். இதனால் நேற்று காலையில் ஆங்காங்கே குப்பைகள் அதிகளவில் கிடந்தன. இவற்றை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றி, மக்கும் குப்பைகளை உரம் தயாரிப்பதற்காக நுண்ணுரம் செயலாக்க மையங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் மக்காத குப்பைகள் தனியாக பிரிக்கப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

98 டன் குப்பைகள் அகற்றம்

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

நாமக்கல் நகராட்சியில் வழக்கமாக தினசரி 50 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஆயுதபூஜையையொட்டி வாழை மரங்கள் மற்றும் தோரணங்கள் கட்டி விழா கொண்டாடப்பட்டது. எனவே குப்பைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. நேற்று மாலை வரை மட்டும் 98 டன் குப்பைகளை அகற்றி உள்ளோம். மீதமுள்ள குப்பைகள் இன்று (புதன்கிழமை) காலையில் அகற்றப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்